தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக திருச்சியில் திருமாவளவன் பேட்டி
தேர்தல் சீர்திருத்த மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.;
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிலத்தரகர்களை அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமான கோரிக்கை. எனவே தமிழக அரசு அவர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும். மக்களவையில் நாளை (இன்று) தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்தாலும் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு அறிமுக நிலையிலேயே தடுக்கவேண்டும்.
தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட வேண்டும். இந்த சட்ட திருத்த மசோதா வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது. இது மிகவும் ஆபத்தானது. தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சிறுபான்மையினரை நீக்குவதற்கு இது ஏதுவாக அமைந்து விடும். எனவே இந்த மசோதாவை அனைத்து கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.