அரசு ஊழியரின் ஆன்மிகத்துடன் இணைந்த தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

அரசு ஊழியரின் ஆன்மிகத்துடன் இணைந்த தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Update: 2024-04-16 13:12 GMT

மாசிலாமணி.

தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை எட்டியாக வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையமும் தமிழக தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக  சுவர்களில் வாசகங்கள் எழுதுவது, பள்ளிகளில் இந்தியா போன்ற வரைபட வடிவில் மாணவர்களை நிற்க வைப்பது, பாலங்களில் ஓட்டுப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வாசகங்கள் எழுதுவது, மணல்  சிற்பங்கள் வரைவது, உழவர் சந்தைகளில் காய்கறிகளால் ஆன தேர்தல் சின்னம் அமைத்தல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகளுக்கு நிகராக பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்து வருகிறார்கள். இவை எல்லாமே வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஏனென்றால் என்னதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் வாக்குப்பதிவு என்பது80 சதவீதத்தை  தாண்டியது இதுவரை நடந்தது இல்லை.நடைபெற உள்ள தேர்தலிலாவது இலக்கை நூறு சதவீதம் இலக்கை எட்ட வேண்டும் என்பது மத்திய மாநில அரசுகளின் குறியாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க அரசு ஊழியர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றும் மாசிலாமணி என்பவர் ஆன்மீகத்தை தொடர்பு படுத்தி விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டு வருகிறார்.

அதாவது நமது நாட்டில் நடக்கும் தேர்தலை ஜனநாயக திருவிழா என வர்ணிப்பது உண்டு. அந்த வகையில் நடைபெற உள்ள பதினெட்டாவது மக்களவையை அமைப்பதற்கான தேர்தலும் ஒரு திருவிழா தான். நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் மக்களவை உறுப்பினர்கள் அமரும் இடமான பாராளுமன்றமும் ஒரு கோவில் போன்றது தான். அதாவது அதனை இந்தியாவின் இறையாண்மைக்கான திருக்கோவில் என்று கூட சொல்லலாம்.

அந்த திருக்கோவிலிற்கான தேர்தல் தான் தற்போது நடைபெற உள்ளது. இந்த கால கட்டத்தில் தான் தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதனை மையப்படுத்தி தேர்தலை ‘தேர்’ தல் என வர்ணித்து உள்ளார் மாசிலாமணி. தேர் திருவிழாவில் மக்கள் தான் வடம் பிடித்து தேரை இழுப்பார்கள். அந்த வடத்தினை 100 சதவீத ஆர்வத்துடன் வடம் பிடிப்போம் என பதிவிட்டு உள்ளார்.

ஜனநாயக தேர்தல் திருவிழாவை தற்போதைய கால கட்டத்தில் ஆன்மிக தேரோட்ட நிகழ்வுகளை தொடர்பு படுத்தி பதிவிட்டு இருப்பது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

Similar News