தீக்காயம்பட்ட நாகை முதியவர் திருச்சியில் சிகிச்சை பலனின்றி சாவு
திருச்சியில் சிகரெட் பட்டு தீக்காயம் அடைந்த நாகையை சேர்ந்த முதியவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.;
நாகை மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 62). இவர் தனது நண்பரை சந்திக்க திருச்சி வந்துள்ளார். அப்பொழுது நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் இருவரும் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் தவறுதலாக சிகரெட் அவருடைய ஆடை மீது விழுந்ததில் தீ பற்றி எரிந்தது. இதில் அவரது வயிறு, மார்பு ஆகிய பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நாகையில் உள்ள அவரது மகன் குமரேசனுக்கு தகவல் கொடுத்ததையடுத்து உடனடியாக புறப்பட்டு நேரில் வந்த குமரேசன் தனது தந்தை பிரபாகரனை நாகைக்கு அழைத்துச் செல்ல, திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால் அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே தந்தையை விட்டு விட்டு மகன் குமரேசன் பஸ் ஏறி நாகைக்கு சென்றுவிட்டார். பஸ் நிலையத்தில் அமர்ந்து இருந்த பிரபாகரனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.