திருச்சி மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு ‘கனவு ஆசிரியர்- 2023’ விருது
திருச்சி மாநகராட்சி பள்ளி ஆசிரியை தமிழக அரசின் ‘கனவு ஆசிரியர்- 2023’ விருது வழங்கப்பட உள்ளது.
ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன்மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கனவு ஆசிரியர் 2023 தேர்வானது பின்வரும் மூன்று படி நிலைகளில் நடத்தப்பெற்றது. இணையவழி மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் தேர்வில் 8096ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 1536ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் இரண்டாம்நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆகதேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர்அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாஅழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன்மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதில் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம்,மாநகராட்சி தொடக்கப்பள்ளி- எடமலைப்பட்டி புதூர் பள்ளியின் ஆசிரியை சு.உமா தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட கனவு ஆசிரியர்தேர்வின் மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெற்று கனவு ஆசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் கீழ் இயங்கி வரும் திருச்சி அஸ்ட்ரோ கிளப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளராக இருந்து விடுமுறை நாட்களிலும், திருச்சி விழா, திருச்சி புத்தகத் திருவிழா போன்ற நிகழ்வுகளிலும் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வான யல் விழிப்புணர்வு நிகழ்வு களை கொண்டு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.