வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கில் கணவர் உட்பட 3 பேர் கைது
திருச்சியில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி தில்லை நகரை சேர்ந்தவர் காமராஜ் மகள் சினேகா (வயது 26). பட்டதாரியான இவர் அரியலூர் மாவட்டம் குலமாணிக்கத்தை சேர்ந்த அறிவழகன் மகன் விஜயகுமார் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது 17 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தில் திருமண செலவுகளை பெண் வீட்டாரே செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் புதிதாக தொழில் தொடங்குவதாக கூறி சினேகாவிடம் வரதட்சணையாக மேலும் ரூ.5 லட்சம் பணம் கேட்டு விஜயகுமார் மற்றும் அவரது தந்தை அறிவழகன், தாய் சகாயராணி ஆகியோர் சினேகாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சினேகா தனது தந்தை மற்றும் உறவினர்களிடம் கூறி அழுது புலம்பியிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சினேகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து சினேகாவின் தந்தை காமராஜ் வரதட்சணைக் கொடுமையால் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று சினேகாவின் கணவன் விஜயகுமார் (வயது 28), அவரது தாய் சகாயராணி (வயது 51), தந்தை அறிவழகன் (வயது 57) ஆகிய 3 பேரையும் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.