இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி திருச்சி மத்திய சிறையில் சாவு

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி திருச்சி மத்திய சிறையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

Update: 2022-01-02 11:09 GMT

ராமையன்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, செம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமையன் (வயது 60). விவசாயியான இவர், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரும், பள்ளி முடிந்து வந்து அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அங்கு வேறு யாரும் இல்லாததால் திடீரென மாணவியின் கையை ராமையன் பிடித்து இழுத்து சென்று அங்குள்ள ஒரு மரத்தடியில் வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவருடைய தாயார் அழைத்து சென்றார். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதனால் அவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டதும் தெரியவந்தது.

இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ராமையனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி, ராமையனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தண்டனை முடிந்தாலும் அவர் சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்த தண்டனைகளை ராமையன், ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து ராமையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், ராமையன் காசநோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ராமையன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி நடராஜன், கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ராமையனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News