‘நம் உயிர் நமது கையில்’ பத்திரிகையாளர் சங்க நிகழ்ச்சியில் டாக்டர் அறிவுரை
‘நம் உயிர் நமது கையில்’ தான் இருக்கிறது என பத்திரிகையாளர் சங்க நிகழ்ச்சியில் திருச்சி டாக்டர் அலீம் அறிவுரை கூறினார்.;
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (டி.யூ.ஜெ) திருச்சி மாவட்ட பேரவை கூட்டம் இன்று திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ஏ. டி. சுகுமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவரும் திருச்சி மாவட்ட செயலாளருமான ஆர்.வளையாபதி வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் பி.எஸ்.டி புருசோத்தமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பத்திரிகையாளர் கவுன்சில் தேசிய குழு உறுப்பினர் சேது, மாநில பொதுச் செயலாளர் போளூர் சுரேஷ், மாநில அமைப்பு செயலாளர் வேளாங்கன், முன்னாள் கவுரவ தலைவர் பாரதராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அமெரிக்கன் அகாடமி மூளை நரம்பியல் துறை தென் மண்டல தனித்துவ பிரதிநிதியாக அறிவிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த பிரபல மூளை நரம்பியல் துறை மருத்துவ நிபுணர் டாக்டர் எம். ஏ .அலீமின் சேவையை பாராட்டி அவருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. அவருக்கு மாநில தலைவர் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து டாக்டர் அலீம் அறிவுரை வழங்கி பேசியதாவது:- பத்திரிகை பணி என்பது ஒரு சமுதாய பணி பத்திரிகையாளர்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்காக உழைப்பது மட்டுமின்றி சமூக நோக்கத்திலும் பணியாற்ற வேண்டியது உள்ளது. இதற்காக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. பத்திரிகை பணி என்பது நமது நாட்டின் நான்காவது தூணாக கருதப்படுகிறது. ஆனால் பத்திரிகையாளர்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும், பெரிய அளவில் அவர்களுக்கு வருமானம் தரக்கூடிய உத்தரவாதமும் கிடையாது. எனவே பத்திரிகையாளர்கள் தங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.
சமுதாயப் பணியை தங்கள் கடமையாக கருதும் பத்திரிகையாளர்கள் தங்கள் உடல் நலத்தை பற்றி கவலைப்படாமல் பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் உடல்நல கேட்டிற்கு ஆளாகிறார்கள். உடலைப் பற்றி கவலைப்படாமல் வேலை செய்யும் சிலருக்கு திடீர் என பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது .அப்படி இருக்கும்போது அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு தேவை. பத்திரிகையாளர்கள் மதுவுக்கு அடிமையாகி விடக்கூடாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல நமது உடல் நலம் நன்றாக இருந்தால் தான் நமது குடும்பத்தையும் காப்பாற்ற முடியும். நாட்டிற்கும் சேவை செய்ய முடியும் ஆதலால் பத்திரிகையாளர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய பத்திரிகை பணி என்பது கணினியை சார்ந்தே உள்ளது. கணினி மற்றும் செல்போன் இல்லை என்றால் எந்த வேலையும் செய்ய முடியாது என்கிற நிலை நாட்டில் உள்ளது. உலகம் முழுவதும் இதுதான் நிலை. பத்திரிகை பணியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் தங்களது செய்திகளை கணினியில் பதிவு செய்ய வேண்டி உள்ளது. செல்போன்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது இருக்கிறது. இதனால் அவர்களது கண் பார்வை பாதிக்கப்படுகிறது. கழுத்து எலும்பு பிரச்சனை முதுகு வலி போன்ற பிரச்சனைகளும் வருகிறது. ஆதலால் பத்திரிகையாளர்கள் தங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் பத்திரிகை பணி மட்டுமல்ல எந்த பணியில் இருப்பவர்களும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு விளையாட்டு, யோகா போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
விளையாட்டு என்றால் உடனே ஜிம்மிற்கு போய் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது அல்ல. சாதாரணமாக எந்தவித உபகரணங்களும் இன்றி வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம். நடக்கலாம், மெதுவாக ஓடலாம். சைக்கிள் ஓட்டலாம். இது போன்ற சிறிய உடற்பயிற்சி செய்தாலே போதுமானது .பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி உலகில் எல்லா பணியில் இருப்பவர்களுக்கும் உடல் நலம் முக்கியமானது. உடல் நலம் நன்றாக இருந்தால்தான் பணி செய்ய முடியும்.
தற்போது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதலால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான் நம் உயிர் நமது கையில் தான். நாம் நீண்ட நாள் வாழ்வதும் அற்ப ஆயுளில் முடிந்து போவதற்கும் நமது பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் தான் காரணம். எனவே மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சிகள் அவசியமான ஒன்று. யோகாசனம் நாள்தோறும் செய்ய வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அலீம் பேசினார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அரசின் சலுகைகள் தங்களுக்கு கிடைப்பதற்கு மாநில தலைவர் ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
இறுதியாக உரையாற்றிய மாநில தலைவர் புருஷோத்தமன் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது பத்திரிகையாளர்கள் குறிப்பாக ஊரகப் பகுதி பத்திரிகையாளர்களுக்கு வரும் காலங்களில் சலுகைகள் கிடைப்பதற்காக பாடுபட்டு வருகிறோம் என்றார்.