திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திடீர் ஆய்வு
திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு பெண் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்காக மாவட்ட அளவில் சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியனும் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் கண்காணிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும்படி கூறி உள்ளார்.
முதல்வர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் திருச்சிமாவட்டத்தில் மூன்று பெண்கள் உட்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அனைவரும் நலமுடன் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் பிரதீப் குமார் திடீர் ஆய்வுமேற்கொண்டார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு வார்டு, ரத்தப்பரிசோதனை உபகரணங்கள், காய்ச்சல் வார்டுகளில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு செய்தார்.அப்போதுகாய்ச்சலுக்கு உண்டான ஊசி, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா? எனவும் விசாரணை நடத்தினார்.ஆய்வின் போது மருத்துவமனை டீன் நேரு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மேலும் டெங்கு என சந்தேகப்படும்படி யார் வந்தாலும் அவர்களை நன்றாக பரிசோதனை செய்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படியும் மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார்.