பச்சைமலை புத்தூர் கிராம சபை கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பச்சைமலை புத்தூர் கிராம சபை கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்றார்.

Update: 2023-11-01 17:02 GMT

பச்சைமலையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்று பேசினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி, புத்தூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2023) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் மக்களாகிய உங்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் என்னென்ன நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விதமாகவும், உங்களுடைய குறைகளை இந்த சபையின் மூலம் நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவே இந்த கிராம சபை கூட்டம் உருவாக்கப்பட்டது. நலத்திட்டங்களை செயல்முறை படுத்துவதற்காக அந்த கிராமங்களை நோக்கி அந்த திட்டங்கள் வந்து கொண்டிருக்கும்.

ஆனால் மக்களுக்கு உண்டான தேவைகளை மக்களிடமிருந்தே பெற்றுக்கொண்டு அதனை அரசாங்கத்திடம் நீங்கள் தெரிவித்திடும் பட்சத்தில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அந்த திட்டங்களை நிறைவேற்றுதற்காக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு தீர்மானங்களாக நாம் இந்த கிராம சபை கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்த கிராமசபை கூட்டம் வருடத்திற்கு 6 முறை தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடைபெறும். இதில் அரசு நலத்திட்டங்களை முதலில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு என்னனென்ன திட்டங்கள் அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த திட்டங்கள் மூலம் ஒரு பயனாளி இதன் மூலம் பயன்பெற்றார்கள் என்றால் கூட இந்த கிராமசபைக் கூட்டத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.

பல்வேறு துறைகளின் திட்டங்கள் பற்றி முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். நமது மாநிலத்தில் மட்டும் சுமாராக தமிழ்நாடு முதலமைச்சரால் 700க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என அனைத்துமே மகளிர் நலன் சார்ந்து அரசால் செயல்படுத்தப்படுகிறது. பெண் ஒரு குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல காரணமாக இருப்பார். அவ்வாறாக சமுதாயமும் முன்னேறும். எனவேதான் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு உழைத்து வருகிறார்.

மேலும், நமது அரசாங்கம் என்பது 42 துறைகள் சார்ந்ததே ஒரு அரசாங்கம் ஆகும். அந்தந்த துறை அலுவலர்களால் அந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு கிராமம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் கிராம மக்களின் தேவைகளான முதல் கோரிக்கையாக இருப்பது பட்டா வேண்டுமென்ற கோரிக்கை, குடிநீர் வசதி கோரிக்கை, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல தேவைகள் இருப்பின் அதனை மக்கள் ஒரு மனுவாக எழுதி இந்த கிராம சபையில் கொடுக்கும் பட்சத்தில் அதனை தகுதியின் அடிப்படையில் நிறைவேற்றித்தரப்படும்.

கிராமசபைக் கூட்டத்தில் தங்களின் பஞ்சாயத்திற்கு எவ்வாறான திட்டங்கள் தேவை என்பதையும், ஏற்கனவே நிறைவேற்றப்பட்டத் திட்டங்களையும் பற்றி பொருட்களை வாசித்து அதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதே இந்த கிராமசபை கூட்டத்தின் நோக்கமாகும். பச்சைமலையில் வாழும் மக்களுக்காக வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய பல திட்டங்ளை விரைவில் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் ரமேஷ் குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)கங்காதாரிணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், உப்பிலியபுரம் ஒன்றிய பெருந்தலைவர் ஹேமலதா முத்துசெல்வம், தென்புறநாடு ஊராட்சி மன்றத்தலைவர் பானுமதி கிருஷ்ணமூர்த்தி  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News