ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர்,வி.ஏ.ஓ. கைது
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர்,வி.ஏ.ஓ. வை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திருச்சி மாவட்டம் லால்குடியை படுத்த கல்லக்குடி பக்கம் உள்ள முதுவத்தூரை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு சொந்தமாக 11 செண்ட் விவசாய நிலம் உள்ளது இந்த நிலம் தொடர்பான பட்டாவில் பிழை இருப்பதால் அதனை திருத்தம் செய்து கொடுப்பதற்கு முதுவத்தூர் கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் (வயது 34) என்பவரை அணுகினார்.
சதீஷ் பட்டாவில் திருத்தம் செய்து தரவேண்டுமானால் தனக்கு ரூ 15,000 லஞ்சம் தரவேண்டும் என கேட்டார். லட்சுமி தன்னால் ரூ 15,000 தர முடியாது என்றதால் அதை 13 ஆயிரமாக குறைப்பதாக கூறினார்.
பின்னர் இது தொடர்பாக லால்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள புள்ளம்பாடி துணை வட்டாட்சியர் பிரபாகரன் (வயது 39) என்பவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ரூ10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத லட்சுமி இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீஸ் படையினர் லால்குடி தாலுகா அலுவலகம் அருகில் நேற்று மதியம் பதுங்கி இருந்தனர்.
அப்போது போலீசார் ஏற்கனவே ரசாயன பவுடர் தடவி கொடுத்து வைத்திருந்த ரூ 10,000 பணத்தை லட்சுமி கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுத்தார் .இதனை பார்த்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சதீஷையும் மண்டல துணை வட்டாட்சியர் பிரபாகரனையும் கைது செய்தனர்.
அவர்கள் இருவரிடமும் விசாரணை நடந்தபின்னர் அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.