ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் மோடி வில்லேஜ் உருவாக்க கோரிக்கை
ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் 200 ஏக்கர் பரப்பளவில் மோடி வில்லேஜ் உருவாக்க பிரதமருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது.
எச். எம். கே. பி. என்ற தொழிற்சங்க அமைப்பின் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2ஆம் தேதி திருச்சிக்கு வருகிறார். அதுசமயம் எச். எம். கே.பி. சார்பில் 3000 வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வீடு கேட்டு மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டு கால பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் ஊழல்வாதிகளும், வசதி படைத்தவர்களும், அரசியல் கட்சி சார்ந்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளனர் குறைந்தபட்சம் சுமார் 500 சதுர அடி நிலம் உள்ளவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும் என்பதால் இந்த நிலை நீடிக்கிறது .
இதைப்பற்றி பிரதமர் அலுவலகத்திற்கு பலமுறை கடிதங்களும் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் குறிப்பாக 40 சதவீத அடித்தட்டு வறுமை கோட்டு குடும்பங்களுக்கு ஒரு சதுர அடி கூட இடமில்லை என்ற நிலை தான் உள்ளது. அவர்கள் பல தலைமுறைகளாக வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். ஆகையால் நாடு முழுவதும் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் மோடி வில்லேஜ் என்ற பெயரில் 200 ஏக்கர் நிலத்தை அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த நிலங்களை அனைவருக்கும் வீடு திட்டத்தில் வறுமை கோட்டு மக்களுக்கு பிரித்துக் கொடுத்து இலவசமாக நிலத்துடன் கூடிய அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும். அப்படி கட்டிக் கொடுத்தால் இந்த அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி ஜனவரி 2ஆம் தேதி திருச்சி வரும் பொழுது அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.