பேரறிவாளனை போல் முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோரிக்கை

பேரறிவாளனை போல் முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய டி.என்.டி.ஜே. கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-06-18 12:39 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு டி.என்.டி.ஜே. இயக்கத்தினர் மனு அளிக்க வந்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் அதன் மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அமர்வின் நீதியரசர் கே.டி. தாமஸ், பின்னாளில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என கேட்டு கொண்டார். தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாறி தற்போது பேரறிவாளன் விடுதலையும் சாத்தியம் ஆகியுள்ளது.

உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.

இந்தியாவின் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் அமைதியை விரும்பும் யாரும் மாற்றுக் கருத்து கொள்ள மாட்டார்கள்.

எனினும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை எனும் போது அதில் சிறுபான்மை சமுதாயத்திற்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான அடிப்படையிலான விடுதலையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த மனிதாபிமான அடிப்படையிலான விடுதலை என்பது மற்ற குற்றவாளிகளுக்கு குறிப்பாக சிறுபான்மை இன சிறைவாசிகளுக்கு ஏன் இல்லை?

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.

அந்த அரசாணையில் வகுப்புவாத, மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கருணை என்று வருகின்ற போது மதம் என்ற பாரபட்சம் ஏன் வருகிறது? குற்றவாளிகளைக் குற்றவாளிகளாக பார்க்காமல் மதம் கொண்டு பார்ப்பது சமூக நீதிக்கு எதிரானது.

தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்ற போது வெளிவந்த அந்த அரசாணை இஸ்லாமியர்களிடம் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அரசாணையை திருத்தி 38 முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோரிக்கை வைத்திருந்தோம்.

பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன்  தலைமையில் காலம் நிர்ணயிக்கப் படாமல் கமிஷன் ஒன்று அமைக்கபட்டது. முஸ்லிம் சமுதாயம் நீதிபதி ஆதிநாதன் கமிஷன் அறிக்கையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நிலையில் தள்ளப்பட்டு விட்டது.

இந்தச் சூழலில் சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News