திருச்சி ஜெயில்கார்னர்- பொன்மலைப்பட்டி சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை
திருச்சி ஜெயில்கார்னர்- பொன்மலைப்பட்டி சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி ஜெயில் கார்னரில் இருந்து பொன்மலையடிவாரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்ததை சரி செய்து 4 மாதங்கள் ஆகியும் ரோடு போடாமல் இருப்பதால் மக்கள் படும் அவதியை போக்க சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை வைத்து உள்ளது.
திருச்சி புதுக்கோட்டை சாலையில் இருந்து ஜெயில் கார்னர் டூ பொன்மலை மலையடிவாரம் செல்லும் பிரதான சாலை அகலபடுத்தும் வேலை நடந்தது. அதில் டீசல் காலனி பகுதி சாலையில் நடுவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து இருந்தால், சுமார் 20 அடி நீளத்திற்கு மேல் தார் ரோடு போடாமல் இருந்தார்கள். குழாய் கசிந்ததை சரி செய்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும், அந்த பகுதியில் தார்சாலை போடாமல் கொத்திய நிலையில் உள்ளது .
கொத்திய சாலை பணிகள் அந்த பகுதியில் நடைபெறவில்லை. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயமும், பெண்கள் அவ்வழி செல்ல அச்சப்படுகின்றனர். வாகனத்தின் டயரும் நிலை குலைந்து போகிறது.
4 மாதங்களுக்கு மேலே ஆகியும் வேலை செய்யாமல் அலட்சியமாக இருப்பதும், பொது மக்கள் அவதி படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் செந்தண்ணீர்புரம் ரயில்வே பாலம் பழுதடைந்து உள்ளதால் தற்போது தஞ்சாவூர் சாலையில் பயணிக்க வேண்டிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.