திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் ஏ. ஜெயா மரணம்

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் ஏ. ஜெயா மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

Update: 2022-01-27 05:04 GMT

திருச்சி முன்னாள் மேயர் ஏ. ஜெயா.

திருச்சி மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயராக கடந்த 2011-2016ம் ஆண்டில் மேயராக இருந்தவர் ஏ. ஜெயா. திருச்சி மாநகர மக்களால்  நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை மாரடைப்பினால் மரணம் அடைந்தார்.

இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் திருச்சி பீமநகர் புதிய ராஜா காலனியில் உள்ள இல்லத்தில் நடக்கிறது. உடல்  தகனம் இன்று மாலை 4.30மணி அளவில் ஓயாமரி மின்தகனத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் மேயர் ஜெயாவின் கணவர் எம்.எஸ்.ஆர். ராஜேந்திரன் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளராக உள்ளார். இவர் ஏற்கனவே திருச்சி மாவட்ட அரசு வழக்கறிஞராக (பிளீடர்) பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது மகன் தருண் நவீன் வழக்கறிஞராக உள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மேயர் ஜெயா இறப்பு செய்தி திருச்சி மாநகர மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகராட்சியின் கடைசியாக பணியாற்றிய பெண் மேயர் என்ற தகுதியும் ஜெயாவிற்கு உள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் திருச்சி மேயர் பதவி பொது பட்டியலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News