திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் தேதி மாற்றம்
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2024-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 27.10.2023 முதல் 05.01.2024 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் அறிவிக்கப்பட்டதை தொடா;ந்து, 04.11.2023 மற்றும் 05.11.2023 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நவம்பர் 18ஆம் தேதி வேலை நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்களுக்கு பதிலாக 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும், நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.