திருச்சி காவிரி ஆற்றில் முதலைகள்: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
திருச்சி காவிரி ஆற்றில் நீந்திய முதலைகளை பொது மக்கள்வேடிக்கை பார்த்தனர்.;
திருச்சி காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சப்பட்டுள்ளனர்.
திருச்சியின் அடையாளங்களில் காவிரி ஆறும் ஒன்று. காவிரி ஆற்றின் முக்கொம்பு, அம்மா மண்டபம் ஆகியவை முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் உள்ளன. பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகில் மயங்காதவர்கள் இல்லை.
திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையில் இருந்து ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையை இணைக்கும் காவிரி ஆற்றின் மேற்கு பகுதியில் ஆற்றின் நடுவே மணல் திட்டுகள் உள்ளன. மேலும் அங்கு நாணல்,காட்டுச் செடிகள் மண்டி காடு போல் காட்சி அளிக்கிறது. இங்கு முதலை ஒன்று தங்கி அவ்வப்போது வெளிவந்து அதிகாலை வேளையில் மீன் பிடிக்கும் மீனவர்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 9 அடி நீளமுள்ள முதலை மீனவர் வலையில் சிக்கி வலையை அறுத்துக் கொண்டு ஓடியது .
இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அன்று முதல் அங்கு மீன்பிடிப்பதை நிறுத்திக் கொண்டனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நாணல் புதர்கள் அகற்றப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு இருந்த முதலை வெளியேறியது.இதனை தொடர்ந்து மீனவர்கள் அந்த பகுதியில் மீண்டும் மீன் பிடிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மீண்டும் அதே பகுதியில் தலா 6 அடி நீளம் உள்ள இரண்டு முதலைகள் நடமாட்டம் காணப்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனம், கார்களை காவிரி பாலத்தில் நிறுத்திவிட்டு ஆச்சரியத்துடன் முதலைகளை பார்த்தவுடன் தங்கள் செல்போன்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
இதனால் நேற்று இரவு காவிரி பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .அப்போது பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்த பொது மக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் பாலத்தில் கூடியிருந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.