திருச்சியில் மழையில் ஒழுகும் மாநகராட்சி பள்ளி- பெற்றோர் மறியல்
திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டி புதூர் பள்ளி மழைநீரில் ஒழுகியதால் பெற்றோர் மறியல் செய்தனர்.;
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மழைநீரில் ஒழுகியதால் வராண்டாவில் வகுப்பு நடத்தப்பட்டது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் தொடக்கப் பள்ளியில் உள்ள சில வகுப்பறைகளில் மழை பெய்தால் மழைநீர் உள்ளே சொட்டு, சொட்டாக ஒழுகுகிறதாம். அதன் காரணமாக ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வராண்டாவில் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நேற்று பெய்த மழையில் பள்ளி குழந்தைகள் நனைந்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து இன்று பெற்றோர்கள் பள்ளி நிர்வாகிகளிடம் கேட்பதற்காக வந்தபோது மீண்டும் பள்ளி குழந்தைகள் வராண்டாவில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெற்றோர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படவே சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.