மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 'சிங்கிள் டிஜிட்' தான்
மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 'சிங்கிள் டிஜிட்' தான் ஒதுக்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் வாக்காள பெருமக்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி28ம் தேதியான நாளை தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 4 மனுக்கள் மீதான பரிசீலனை 5ஆம் தேதி நடைபெறும். ஏழாம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் மாநகராட்சிகளைப் பொறுத்தவரை 21 மாநகராட்சிகளின் 1,374 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 138 நகராட்சிக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 490 பேரூராட்சிக்குட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 838 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மாநிலம் முழுவதும் மொத்தம் ஒரு கோடியே 54 லட்சத்து 84 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மறைமுக தேர்தல் மூலம் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும் வழக்கம்போல் நடைபெற உள்ள தேர்தலிலும் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும், எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க. விற்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று கூட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது சம்பந்தமாக முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இந்த ஆலோசனையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகள் மற்றும் நகராட்சித் தலைவர் பேரூராட்சி தலைவர் பதவி இடங்களை தி.மு.க.வே கைப்பற்றத் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார்போல் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சிகளைப் பொறுத்தவரை மொத்தம் 21 இருந்தாலும் சென்னை பெருநகர மாநகராட்சியில் மட்டும் தான் 200 உறுப்பினர்கள் உள்ளனர். மதுரை, கோவை மாநகராட்சிகளில் தலா 100 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மற்ற மாநகராட்சிகளில் எல்லாம் 100 எண்ணிக்கைக்கு கீழே தான் உள்ளனர். தி.மு.க.வின் திட்டப்படி கூட்டணி கட்சிகளுக்கு சென்னை தவிர மற்ற அனைத்து மாநகராட்சிகளிலும் ஒற்றை இலக்கத்தில் அதாவது 'சிங்கிள் டிஜிட்' டில் தான் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன.இதில் 15 வார்டுகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 50 வார்டுகளில் தி.மு.க. நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தும் என கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
சிங்கிள் டிஜிட்டில் இட ஒதுக்கீடு செய்தால் தான் மேயர் பதவியை தி.மு.க. எந்த வித சிரமுமின்றி கைப்பற்ற முடியும் என்பது தி.மு.க.வின் திட்டம். ஒதுக்கீட்டில் திருப்தியடையாத கூட்டணி கட்சிகள் சில மாவட்டங்களில் தங்கள் வேட்பாளர்களை தனியாக அறிவிக்கவும் தயாராகி வருகின்றன.
மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கணிப்பாக உள்ளது.