கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அரசால் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.;
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1,620 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 899 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. 57 பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 202 விண்ணப்பங்களில் வாரிசுதாரர் மற்றும் சட்ட ரீதியான பிரச்சினை காரணமாக வழங்க இயலாத நிலை உள்ளது. எஞ்சிய விண்ணப்பங்களில் உரிய ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய் யப்படவில்லை. இத்தகைய விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் http://tiruchirappalli. nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை ஆவணம், இறப்பு சான்று, வாரிசு சான்று மற்றும் வங்கிக் கணக்கு எண் குறித்த ஆவணங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மைப் பிரிவு அல்லது தங்களது தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் தாக்கல் செய்து நிதி உதவியை பெறலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.