திருச்சி அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா தொற்று காலத்திலும் பணியாற்றிய நிலையில் கடந்த 16-ந் தேதி முதல் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆகவே இவர்களுக்கு முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மீண்டும் வேலை வழங்கக்கோரி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் மாறன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் ராஜூ போராட்டத்தை விளக்கி பேசினார். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.