திருச்சி மாநகராட்சிக்கு சைக்கிளில் வந்து பதவி ஏற்றார் 'காம்ரட்' சுரேஷ்
திருச்சி மாநகராட்சிக்கு சைக்கிளில் வந்து பதவி ஏற்றார் 23வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் சுரேஷ்.;
திருச்சி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 65 மாமன்ற உறுப்பினர்களும் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆணையர் முஜிபுர் ரகுமான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 23வது வார்டில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு சுரேஷ்குமார் வெற்றி பெற்றார். திருச்சி மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளரும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமானவரும், சமூக பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காண்பவருமான சுரேஷ்குமார் மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்காக இன்று தனது வீடு அமைந்துள்ள உறையூர் குறத்தெருவில் இருந்து கூட்டணி கட்சி தொண்டர்கள் புடைசூழ சைக்கிளில் புறப்பட்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
திருச்சி மாநகராட்சியில் இன்று பதவி ஏற்றுள்ள பெரும்பாலான கவுன்சிலர்கள் சொகுசு கார்கள், இரு சக்கர வாகனங்களில் பயணித்து வந்த நிலையில் காம்ரேட் சுரேஷ் குமார் சைக்கிளில் வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.