திருச்சியில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி- கமிஷனர் துவக்கி வைத்தார்
திருச்சியில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கமிஷனர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் மட்டும் 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்தும் விதமாக முதல் கட்டமாக தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மாநகர கமிஷனர் கார்த்திகேயன் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அதன் பின்னர் கமிஷனர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறும்போது இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் அதிலிருந்து 9 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள தகுதியானவர்கள். மேலும் போலீசார் குடியிருப்பில் நேரடி முகாம் மூலம் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காவலர்களின் 97 சதவீதம் பேர் முதல் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள 3 சதவீதம் பேர் பல்வேறு உடல் உபாதை காரணமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1400 காவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த உள்ளோம். இதில் 500 காவலர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிகின்றனர். எனவே அதை போலீசார் மட்டும் நினைத்தால் சரி செய்ய முடியாது. பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், இது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.