திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை
திருச்சியில் கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருச்சி தென்னூர் புது மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் தற்போது தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பின் தலைவராக உள்ளார். இவரது மகள் மலர்விழி மீரா (வயது 19). திருச்சி மாத்தூர் பகுதியில் உள்ள எம்.ஐ.இ.டி.,கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தகவல் தொழில் நுட்பம் படித்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாலமுரளி கார்த்திக் (வயது 34). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மலர்விழி மீராவை இவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் இந்த காதலை பலமுறை மீராவிடம் சொல்லும் போதெல்லாம் பாலமுரளி கார்த்திக்கிற்கு, இது தவறு நாம் இருவரும் தூரத்து உறவின் முறையில் அண்ணன் தங்கை என்று மீரா அட்வைஸ் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுரளி கார்த்திக் கல்லூரி சென்று விட்டு வீடு திரும்பிய மலர்விழி மீராவை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் வழிமறித்து, 20 தடவைக்கு மேல் வெறிபிடித்தாற்போல் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே மலர்விழி மீரா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுரளி கார்த்திக்கை கைது சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது திருச்சி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பினை இன்று நீதிபதி தங்கவேலு கூறினார். இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். இந்த தொகையானது இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக வழங்கிடவும் அவர் உத்தரவிட்டார்.