திருச்சி கல்லூரி மாணவர் விடுதிகளில் ஏ.பி.வி.பி. அமைப்பு திடீர் ஆய்வு
திருச்சி கல்லூரி மாணவர் விடுதிகளில் ஏ.பி.வி.பி. அமைப்பினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா தொற்றுக்குப்பின், தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூரிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்கள் அரசு மாணவர் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு திருச்சி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) சார்பில், ஒரு குழு அமைக்கப்பட்டு விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி விக்னேஸ்வரன் தலைமையில், பிரவீன்குமார், சக்திவேல், மகேந்திரன், சதீஷ்குமார், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருச்சி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி மாணவர் விடுதி, அரசு கல்லூரி மாணவர் விடுதி ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதி கட்டடங்கள் மற்றும் கழிவறை வசதிகள் மோசமான நிலையில் இருந்ததாகவும் விடுதிகளின் நிலைமை குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டு ஆய்வறிக்கையை மாவட்ட கலெக்டர், விடுதி இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் எனவே தமிழக அரசு இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு விடுதிகளை சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டும் என ஏபிவிபி விடுதிகள் கள ஆய்வு குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.