மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த சி.ஐ.டி.யு. முடிவு

மத்திய அரசை கண்டித்து 10-ம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது என சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் முடிவு செய்து உள்ளது.

Update: 2021-12-03 13:50 GMT

திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

வாலிபர், மாதர், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், ஆட்டோ, சாலை போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் திருச்சி சி.ஐ.டி.யு. மாவட்ட குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு போக்குவரத்து சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் போராட்ட நோக்கத்தை விளக்கி பேசினார்.

கூட்டத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது 270 சதவீத கலால் வரி விதிப்பே பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. மேலும் சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் தற்போது குறைந்துள்ள நிலையில் மத்திய அரசு விலையை குறைக்க மறுப்பதால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனால் அனைத்துப் பகுதி மக்களுக்கும் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விளக்கி அனைத்து பகுதி மக்களிடமும், வாகன ஓட்டிகளிடம், சிக்னல், டோல்பிளாசா, பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் வரும் 7,8, 9-ந் தேதிகளில் துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்வது. டிசம்பர் 10-ந்தேதி அன்று பகல் 12 மணிக்கு 10 நிமிடம் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்துவது.

திருச்சி மாவட்டத்தில் தஞ்சை ரோடு, திண்டுக்கல் ரோடு, மதுரை ரோடு, கரூர் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன், சத்திரம் பேருந்து நிலையம் உள்பட 50 இடங்களில் இந்த போராட்டத்தை நடத்துவது.

இதில் சி.ஐ.டி.யு, வாலிபர், விவசாய, விவசாய தொழிலாளர், சாலை போக்குவரத்து தொழிலாளர், ஆட்டோ சங்கங்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வாலிபர் சங்கம் லெனின், விவசாயிகள் சங்க கே.சி.பாண்டியன், விவசாய தொழிலாளர்கள் சங்கம் தங்கதுரை, ஆட்டோ சங்கம் மணிகண்டன், மாதர் சங்கம் சரஸ்வதி, பி.எஸ்.என்.எல்.இ.யூ சுந்தர்ராஜன் மற்றும் ரகுபதி, சுப்பிரமணியன், செல்வராஜ், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News