திருச்சியில் நடந்தது மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-12-26 11:56 GMT

திருச்சியில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாநகராட்சி நான்காம் மண்டல உதவி ஆணையர் சண்முகம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

பொது மக்கள் தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அரசு அதிகாரிகளை தேடிச் சென்று அலைந்து திரிந்து அவர்களது நேரம் வீணடிக்கப்படாமல் இருப்பதற்காக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை கோவையில் கடந்த 18ஆம் தேதி துவக்கி வைத்தார். அதே நாளில் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இந்த முகாமினை தொடங்கி வைத்தார்கள். அதிகாரிகளை தேடி பொதுமக்கள் அலைந்து திரிந்து அவர்களது நேரம் வீணாகாமல் இருப்பதற்காக அதிகாரிகளே மக்களை தேடி அவர்களது குறைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து மனுக்களாக பெற்று தீர்த்து வைப்பது தான் இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளிலும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை ஒரு முகாமிற்கு நான்கு அல்லது ஐந்து வார்டு மக்கள் பயனடையும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள வயர்லெஸ் சாலை முத்தையா மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.முகாம் காலை 9 மணிக்குத் தான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் காலை 8 மணிக்கு எல்லாம் மக்கள் கையில் மனுக்களுடன் வந்து குவிந்து இருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களது மனுக்களை திருச்சி மாநகராட்சி 4-ம் மண்டல உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு பரிசீலனை செய்தனர்.

இந்த முகாமில் புதிதாக பட்டா கேட்டும் பட்டா பெயர் மாற்றம் கோரியும் ஏராளமான மனுக்கள் கொடுக்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு, மின் நுகர்வோர் பெயர் மாற்றம், தெருக்களில் சாலை மற்றும் குடிநீர், மின்விளக்கு வசதி கேட்டும் ஏராளமான மனுக்கள் கொடுக்கப்பட்டது. மாலை வரை நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினார்கள். பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முப்பது நாட்களில் விசாரணை நடத்தி தீர்வினை அறிவிப்பார்கள் என முகாமில் தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில் மனு கொடுத்தவர்கள் அதிகாரிகளை தேடி அலைவது மிச்சமாகி இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த முகாமில் திருச்சி மாநகராட்சி 61, 63, 64, மற்றும் 65 ஆகிய நான்கு வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினார்கள். இதுபோன்ற முகாம்கள் திருச்சி மாநகராட்சி பகுதியில் வருகிற ஜனவரி மாதமட் ஐந்தாம் தேதி வரை வார்டுவாரியாக  நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News