பலத்த காற்றினால் திருச்சியில் தரை இறங்க முடியாத சென்னை விமானம்
பலத்த காற்று டன் கூடிய மழையினால் சென்னை விமானம் திருச்சியில் தரை இறங்க முடியாமல் திரும்பி சென்றது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பிற நகரங்களுக்கும் உள்நாட்டு சேவையாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி -சென்னை உள்நாட்டு விமான சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த விமான சேவையை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்தனர். இரவு 10 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தின் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதனால் சென்னையில் இருந்து திருச்சி வந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. வானில் இரண்டு முறை சுற்றிய அந்த விமானம் பருவநிலை மாற்றம் காரணமாக மீண்டும் சென்னைக்கே சென்றது.இதன் காரணமாக அமைச்சர்கள் உள்ளிட்ட 33 பயணிகள் அந்த விமானத்தில் பயணிக்க முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.