சத்திர பஸ் நிலைய கடைகள் ஏலத்தில் வெளிப்படை தன்மை கடைபிடிக்க வேண்டுகோள்

சத்திர பேருந்து நிலைய கடைகள் ஏலத்தில் வெளிப்படைதன்மையை மாநகராட்சி நிர்வாகம் கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-04 09:30 GMT

கிஷோர் குமார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் வக்கீல் கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சி மாநகரத்தின் மைய பகுதியில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தை சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் திறந்துவைத்தார். மேலும் இன்றிலிருந்து [04.01.2022] சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சேவை துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. மேலும் சத்திரம் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுமார் 54 கடைகள் மற்றும் முதல் தளத்தில் புட் கோர்ட், கழிப்பிடம் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான "ஏல அறிவிப்பை" திருச்சி மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது.

மேலும் மேற்படி ஏல அறிவிப்பில் தற்பொழுதைய "ஒமிக்ரான்" சூழலை கருத்தில் கொண்டு எவ்விதமான அடிப்படை திட்டமிடலையும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த தவறியதாகவே நாம் கருத முடிகிறது.

ஏனெனில் திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நான்கு இனங்களுக்கான பொது ஏலம் ஒரே நாளில், ஒரே இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுவதால் பெரும் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. இதனால் நோய் தொற்று அதிகரிக்ககூடும் என்பது கள எதார்த்தம்.

இதனை தவிர்க்கும் விதமாக சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மொத்தம் 54 கடைகளில், சுமார் 18 கடைகள் வீதம் காலை, மாலை என போதிய கால இடைவெளியில் மூன்று ஷிப்ட்டுகளாக அந்த, அந்த கடைகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளும் விதமாக திட்டமிட்டால், தேவையில்லாத கூச்சல், குழப்பத்தை தவிர்க்கலாம் என்பது எங்களது தாழ்மையான கருத்து.

மேலும் மேற்படி நான்கு இனங்களுக்கான விண்ணப்பங்கள் "ஆன்லைன் மூலமாக" மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. எனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை திருச்சி மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் மேற்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் இதற்கு முன்பு கடை நடத்தியவர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக அதே சத்திரம் பேருந்து நிலையத்தில் தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டன. மேற்படி தற்காலிக கடைகளை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் எதிர்வரும் காலங்களில் என்ன செய்யபோகிறது...? அந்த வியாபாரிகளுக்கு மீண்டும் சில சலுகைகளுடன் சத்திரம் பேருந்து நிலையத்தில் புதிய கடைகள் ஒதுக்கி அவர்களது வாழ்வாதாரம் காக்கப்படுமா.? என்பன போன்ற பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

ஏனெனில் கடந்த 2010 ஆம் ஆண்டு இதே சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாட்டர் டேங்க் கீழ் பகுதிகளில் உள்ள கடைகள் ஏலம் விடப்பட்டன. ஆனால் இந்த பொது ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் தாறுமாறாக மாதாந்திர வாடகைக்கு கடை எடுத்தார்கள். ஆனால் அதன் பிறகு மேற்படி கடைகளை நடத்த முடியாமல். மீண்டும் அந்த கடைகளை திருச்சி மாநகராட்சியிலே சரண்டர் செய்தும், இது வரை கடைகளை நடத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் தற்பொழுது வரை இந்த வளாகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் பூட்டியே உள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இதனால் மேற்படி வாட்டர் டேங்க் கடைகளை பொறுத்து வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் சமிபத்தில் திறக்கப்பட்ட கள்ளிக்குடி மார்கெட் விவகாரத்திலும் இது போன்ற பல தவறுகள் நடைபெற்றதும் குறிப்பிடதக்கது.

எனவே திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சரியான திட்டமிடலுடனும், ஏற்கனவே வாழ்விழந்துள்ள இதற்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையத்தில் கடை நடத்தியவர்களின் வாழ்வாதாரம் காத்தும், தற்பொழுதைய ஒமிக்ரான் பொருந்தொற்றை கருத்தில் கொண்டு பொது ஏலத்தை நடத்த தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News