ராசிமணலில் அணை கட்ட வலியுறுத்தி காவிரி விவசாயிகள் சங்கம் பேரணி
ராசிமணலில் அணை கட்ட அனுமதிக்க என்ற கோரிக்கையை வலியுறுத்தி காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் பேரணி நடந்தது.
மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி நடத்தும் பாத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சூழ்ச்சியை கைவிட்டு, தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதிக்க வேண்டும், மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய கொடுத்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தில் ராசிமணலில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி பேரணி தமிழக காவிரி விவசாயி சங்கம் சார்பில், அதன் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான பேரணி திருவாரூரில் தொடங்கி மேகதாது வரை நடைபெற உள்ளது.
இப்பேரணி நேற்று காலை திருவாரூரில் தொடங்கி தஞ்சாவூர் வழியாக மாலை திருச்சி வந்தது. திருச்சியில் சிந்தாமணி காவிரி பாலத்தில் தொடங்கிய பேரணி, சிந்தாமணி அண்ணாசிலை, வழியாக கரூர் ரோட்டில் நிறைவடைந்தது. அங்கு, விவசாயிகளிடையே பி.ஆர்.பாண்டியன் பேசினார்.
பேரணியில், திருச்சி மாவட்ட தலைவர் கஜராஜன், மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பேரணியில் வந்தவர்கள் நாமக்கல் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.