காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு திருச்சியில் தலைமை பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.;
சாமானிய மக்கள் நலக் கட்சியினர் அதன் பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் இன்று காலை திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்ட முடிவில் அவர்கள் தலைமை பொறியாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டது. இதனால் அந்த ஆறுகளில் 20 அடிக்கு மேல் பள்ளத்தாக்கு போல் ஆகிவிட்டது. இதன் காரணமாக ஆறுகளில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் குறைந்த அளவே நீர் செல்கிறது.
மேலும் வாய்க்கால் கரைகளில் உள்ள நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை கடந்த ஜனவரி மாதம் காவிரி, கொள்ளிடம் உள்ள உள்பட்ட முக்கிய ஆறுகளில் 16 இடங்களில் லாரி மணல் குவாரிகளும்,21 இடங்களில் மாட்டுவண்டி மணல் குவாரிகளும் அமைக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்து உள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என யாரையும் கருத்து கேட்காமல் அரசு தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்து அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வளம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.