திருச்சி பாலக்கரையில் 3 கிலோ கஞ்சா விற்றவர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் லாட்டரி சீட்டு, கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியில் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சாவிற்றுக்கொண்டிருந்த பாலக்கரை,கெம்ஸ் டவுன் செபஸ்தியார்கோவில் தெருவை சேர்ந்த குணா என்கிற குணசேகரன் (வயது 51) என்பவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடமிருந்து 3 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் எண்கள் எழுதப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.32 ஆயிரத்து500 ஆகும். இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்த பாலக்கரை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.