திருச்சி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான பிரச்சாரம்
திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம் துவக்கப்பட்டது.;
ஜூலை மூன்றாம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பையில்லா தினம் ஆகும். இதனையொட்டி திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையில் இன்று திருச்சி மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கோ அபிஷேகபுரம் மண்டல உதவி ஆணையர் செல்வ பாலாஜி, சுகாதார அதிகாரி இளங்கோவன், ஸ்கோப் தொண்டு நிறுவன இயக்குனர் பத்மஸ்ரீ சுப்புராமன் ஆகியோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்.
முதற்கட்டமாக தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையில் உள்ள 112 கடைக்காரர்களும் பிளாஸ்டிக் பொருட்களை, பிளாஸ்டிக் கேரி பைகள் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டு அதற்கான பலகையில் கையெழுத்திட்டனர் இதில் பொதுமக்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.