லஞ்சம்: திருச்சி மேற்கு தாசில்தார் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவு
லஞ்சம் வாங்கி கொண்டு பல கோடி நிலம் மோசடிக்கு உதவியதால் திருச்சி மேற்கு தாசில்தார் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.
திருச்சி மக்களின் நீண்டகால கனவான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்காக கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திருச்சிக்கு நேரடியாக வந்து ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டு சென்றார்.
இந்த நிலையில் திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் யாகப்புடையான் பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவில் திருச்சி மேற்கு வட்டம் பஞ்சப்பூர், கே.கே. நகர், கே. சாத்தனூர் வருவாய் கிராமங்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை சார்பதிவாளர், மேற்கு வட்டாட்சியர் மற்றும் சில அலுவலர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு பத்திர பதிவு செய்துள்ளதாகவும், இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை அனுப்புமாறு தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை ஆணையர் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார் .அந்த உத்தரவில் விசாரணை அறிக்கையை விரைவாக அனுப்புமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஓய்வு நிலையிலோ அல்லது பதவி உயர்வு பெறும் நிலையில் இருந்தால் தனிக்கவனம் செலுத்தி அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள பஞ்சப்பூர் பகுதியில் நிலம் தொடர்பான புகார் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.