திருச்சி மலைக்கோட்டை பகுதி கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

திருச்சி மலைக்கோட்டை பகுதி கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-01-07 15:00 GMT

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை. சிசிடிவியில் சிக்கிய 3 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள மேலபுலிவார்டு ரோடு இப்ராகிம் பார்க் எதிரே உள்ள ஒரு வணிக வளாகத்தின் தரை தளத்தின் கீழே ஸ்ரீ ஜெயகுரு ஏஜென்சிஸ் என்ற பெயரில் மோட்டார் பம்ப்செட், பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

இந்த கடையின் உரிமையாளர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் சட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடையில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ. 2 லட்சத்து 31 ஆயிரம் பணம் மற்றும் அருகில் இருந்த மற்றொரு கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம் கொள்ளை அடித்துள்ளது தெரிய வந்தது.

மேலும் இதேபோல நடு குஜிலித் தெருவில் ஹவர்சிங் என்பவரது மகன் வீரேந்திரசிங் என்பவர் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றவர் இன்று காலை தனது கடையை திறக்க வந்தபோது அவரின் கடை சட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டபோது அதில் மூன்று பேர் கடையின் வெளியே வந்துள்ளது பதிவாகியுள்ளது.

மேலும் மூவரும் கதவை கையால் லேசாக நெம்பி ஒருவர் மட்டும் கடையின் உள்ளே சென்று பணம் பொருளை தேடி உள்ளார். ஆனால் கடையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றதும் திரும்பி சென்று விட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி பதிவினை வைத்து போலீசார் இந்த மூன்று கடைகளில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மற்ற இரண்டு கடைகளில் ரூ. 3.31 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இதே நபர்கள் தானா? அல்லது வேறு நபர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று தடுக்கும் விதமாக நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து இதுபோல் நடைபெறாமல் இருக்க போலீசார் அனைத்து பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அந்த பகுதி வணிகர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News