திருச்சியில் முடக்கப்பட்ட சாலை: மின்னல் வேகத்தில் தடுத்து நிறுத்திய போலீசார்

திருச்சி ஜேகே நகரில் தனிநபரால் முடக்கப்பட்ட சாலையை மின்னல் வேகத்தில் வந்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2024-06-20 15:09 GMT

திருச்சி ஜேகேநகர் விரிவாக்க பகுதியில் மூடப்பட்ட மாநகராட்சி தார் சாலை.

திருச்சி ஜே. கே நகர் விரிவாக்க பகுதியில்  திடீரென தார் சாலை முடக்கப்பட்டது. போலீசார் மின்னல் வேகத்தில் வந்து தடுத்து நிறுத்தி பொதுமக்கள்  பயன்பாட்டுக்கு திறந்து விட்டனர்.

திருச்சி காஜாமலை  அருகில் உள்ளது ஜே.கே. நகர். திருச்சி மாநகராட்சியின் 61 வது வார்டு வார்டில் அமைந்துள்ள ஜே.கே. நகர் மற்றும் அதன் விரிவாக்க பகுதிகள் அனைத்தும் திருச்சி மாநகராட்சியால் முறைப்படி மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கப்பட்ட பகுதியாகும். இங்கு  மத்திய, மாநில அரசு ஊழியர்கள், குடிநீர் வடிகால் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ,ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ரயில்வே,காவல் துறை அதிகாரிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகிறார்கள்.

மாநகராட்சி சார்பில் இங்குள்ள அனைத்து தெருக்களுக்கும் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. பாதாள சாக்கடையும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. ஆனால் இணைப்புகள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை .

திருச்சி ஜே.கே.  நகர் விரிவாக்க பகுதியில் உள்ள கோதாவரி தெருவையும் அதன் அருகில் உள்ள லூர்துநகரையும் இணைக்கும் தார் சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஜேகே நகர் பகுதி மக்கள் மட்டும் இன்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முகமது நகர் ,ஆர் ,திருமுருகன் நகர், எஸ், புரம், ராஜகணபதி நகர், பாரதி நகர், ஆர்விஎஸ் நகர், காந்தி நகர் மற்றும் காஜாமலை, கேகே நகர் பகுதி மக்களும் இந்த சாலை வழியாக புதுக்கோட்டை சாலை மற்றும் விமான நிலைய பகுதியை எளிதாக கடந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மதியம் இந்த சாலையை தனி நபர் ஒருவர் பள்ளம் தோண்டி போஸ்ட் ஊன்றி சிலாப் கற்கள் மூலம் அடைக்க முற்பட்டார். இதனை அறிந்த ஜேகே நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தினர் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து விமான நிலையை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாலையை ஆக்கிரமித்து கல் நடும் பணியை தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது போலீசாரிடம் அந்த நபர்  தன்னுடைய நிலத்தில் மாநகராட்சி சாலை அமைத்து இருப்பதாகவும் இது தன்னுடைய பட்டா நிலம் என்றும் கூறினார். அதனை கண்டித்த போலீசார் பட்டா நிலமாகவே இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள தார் சாலையை திடீர் என மறித்து முடக்குவது தவறு உங்களுக்கு அதில் உரிமை இருந்தால் அதற்கான ஆதாரங்களை சர்வேயர் மூலம் அளந்து காட்டுங்கள். அதுவரை இந்த சாலையை மூடக்கூடாது. மூடினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை செய்தனர்.இதனை தொடர்ந்து பள்ளம் தோண்டப்பட்ட சாலை சரி செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.


இந்நிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் போலீசார் முன்னிலையில் சர்வேயர் மூலம் அளவீடு செய்யும் பணி இன்று செய்யப்பட்டது. இதில் ஜேகேநகர் விரிவாக்க பகுதி மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் லூர்துநகர் பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஏற்கனவே சாலைக்கு உரிமை கொண்டாடிய நபருக்கும், இன்னொரு மனையின் உரிமையாளருக்கும் இடையே  நில பிரச்சினை இருப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து மனை பிரிவினை விற்பனை செய்த நபரிடம் முறையாக விசாரணை நடத்தி அதன் பின்னர் சாலை உள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்றும், அதுவரை சாலையை யாரும் மூடக்கூடாது என்றும் கூறி போலீசார் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

திருச்சி ஜேகே நகர் விரிவாக்க பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் தார் சாலை திடீரென ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. சரியான நேரத்தில் மின்னல் வேகத்தில் வந்து ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News