திருச்சியில் நள்ளிரவில் பா.ஜ.க.வினர் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு
திருச்சி மலைக்கோட்டை அருகே நள்ளிரவில் பா.ஜ.க.வினர் திடீரென நடத்திய மறியல் போராட்டத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் நீர்வீழ்ச்சியில் லேசர் விளக்குகள் மூலம் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் ஒலி, ஒளி அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவும் அதே போல சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ஒளி காட்சியில் மாற்றுமதம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றதாகவும், இதனை கண்டித்தும் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் தலைமையில் நேற்று நள்ளிரவு தெப்பக்குளம் நந்திகோவில் தெருவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பா.ஜ.க.வினர் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வர வேண்டும் என வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இன்று மாநகராட்சி அலுவலகத்தில் அந்த வீடியோ காட்சிகளை பார்த்து ஆட்சேபனை இருக்கும் காட்சிகளை நீக்க ஒப்புதல் வழங்கியதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இரவு 11 மணிமுதல் நள்ளிரவு 1.15 மணிவரை தெப்பக்குளம் பகுதியில் நடந்த மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.