பாரத் பந்திற்கு திருச்சியில் ஆதரவும் எதிர்ப்பும்
பாரத் பந்திற்கு ஆதரவாக திருச்சியில் பல போராட்டங்கள் நடைபெற்றது. அதே நேரத்தில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.
மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தடுக்க வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் கட்சிகள் விவசாய அமைப்புகள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திருச்சியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும், சாலைமறியல்களும், நடைபெற்றது. இதில் போலீசார் போராட்டங்கள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அந்தந்தப் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல விவசாய அமைப்பு சார்பிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து உறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள தரைக்கடைகள் முழுமையாக ஆதரவு தெரிவித்து அடைக்கப்பட்டிருந்தது. மற்ற பகுதிகளில் ஒரு சில கடைகள் தவிர மற்ற பெரிய கடைகள், நகைக்கடைகள் போன்ற அனைத்து கடைகளும் திறந்து இருந்தது. பொதுமக்கள் வழக்கம் போல கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.