திருச்சியில் உடற்பயிற்சி மாஸ்டருக்கு சரமாரி வெட்டு: போலீசார் விசாரணை

திருச்சியில் உடற்பயிற்சி மாஸ்ட்ரை சரமாரியாக வெட்டியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-12-24 08:30 GMT

பைல் படம்.

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் அருண்பாபு (வயது36). இவர் திருச்சி கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு கோட்டை சரகத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் தினமும் வந்து உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போது அந்த பெண்ணிற்கும், அருண்பாபுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் தொழில் அதிபருக்கு தெரிய வந்ததும், மகளையும், அருண்பாபுவையும் கண்டித்தார். இந்நிலையில் நேற்று உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரே அருண்பாபு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அருண்பாபுவை வெட்டுவதற்கு அரிவாளுடன் பாய்ந்தனர். அவர் சுதாரித்து உயிர் தப்பிக்க அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்குள் ஓடி ஒளிந்து கொள்ள முயற்சித்தார். ஆனால் அந்த கும்பல் விடாது துரத்தி சென்று ஆஸ்பத்திரி மருந்தகத்தில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் அருண்பாபுவை சரமாரியாக வெட்டியதில் வலது கை மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில், தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். தொழில் அதிபர் மகளை காதலித்ததால் தான், தன்னை 3 அடியாட்களை வைத்து கொல்ல முயற்சித்திருப்பதாக அருண்பாபு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். திருச்சி தில்லைநகரில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News