திருச்சியில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சியில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி திருச்சி சுப்பிரமணியபுரம் மற்றும் மன்னார்புரம் பகுதியில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சேதுபதி தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினார்கள். மேலும் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டுனர்களுக்கு பரிசுகள் வழங்கியும் ஊக்கப்படுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர்கள் ரவிக்குமார் (திருச்சி), எழிலரசி (பெரம்பலூர்) உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் அவ்வழியாகச் சென்ற வாகனங்களின் பின்புறம் சிவப்பு வண்ண ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள்.
அவர்கள் வழங்கிய துண்டு பிரசுரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர், மித வேகம் மிக நன்று, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர், பாலம் மற்றும் வளைவில் முந்தாதீர், சாலை விதிகளை மீறாதீர், சிக்னல் விதிகளை மதித்து நடப்பீர், ௧௦ மீட்டர் இடைவெளி விட்டு செல்லவும், ஓட்டுனர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், வாகனத்தின் பின்புறம் சிகப்பு விளக்கு மற்றும் ஔிரும் ஸ்டிக்கர் ஒட்டுங்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
இந்த துண்டு பிரசுரங்களை வழங்கி இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.