உலக கண்பார்வை தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக கண்பார்வை தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;
கண்பார்வை இல்லை என்றால் இந்த உலகமே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது. உலக அளவில் கண்பார்வையற்றவர்களின் எண்ணிக்கை இந்திய நாட்டில் அதிக அளவில் உள்ளது.இதற்கு காரணம் நமது நாட்டில் மக்கள் தொகை அதிக அளவில் இருப்பது தான். பரம்பரை, பிறவிக்குறைபாடு, மற்றும் தொழிற்சாலை, பணியிட விபத்து போன்றவற்றினால் நமது நாட்டில் பார்வையற்றவர்கள் பெருகி வருகிறார்கள். கண்பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை அளித்து அவர்களையும் இவ்வுலகை பார்க்க செய்யும் வகையில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் நிதி உதவி அளித்து வருகின்றன. இதற்காக உலக அளவில் கண்பார்வை தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பலூன் பறக்க விட்டனர்.
உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மக்களுக்கு கண் நலம் பற்றிய விழிப்புணர்வை வழங்கி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி உலகம் முழுவதிலும் சுமார் 43 மில்லியன் மக்கள் கண்பார்வை இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு கண் நலம் பற்றிய சில முக்கிய விழிப்புணர்வையும், கண் நோயை குணப்படுத்துவதை காட்டிலும் அதனை வராமல் தடுப்பது, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து குணப்படுத்துவது போன்ற தகவல்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியை படிக்க இதில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் திரும்ப படித்து உறுதி எடுத்துக்கொண்டனர். ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதீபா மற்றும் மருத்துவமனையில் நிர்வாக தலைவர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் ஆகியோர் முன்னிலையில் அனைவரும் தங்கள் கண்களை பரிசோதித்து கொள்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பாரத் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு தொடர்பான பலூனை பறக்க விட்டார். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி பிரபா அவர்கள் சிறப்புரையாற்றினார். ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபா பிரபு மற்றும் அவரது குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.