அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவி தொகை: திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டில் ரூபாய் 6 கோடியே 90 இலட்சம் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் கூறினார்.
திருச்சிராப்பள்ளி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் 01.04.2022 முதல் 31.01.2023 வரை கல்வி, திருமணம், கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், புதிய ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் என 19,096 தொழிலாளர்களுக்கு ரூபாய் 6 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கை, பிற துறைகள் மூலம் பெறப்படும் தடையின்மை சான்று, பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டு மனை வைத்திருந்தால் அவா்களாகவே வீடு கட்டிக்கொள்வது, வீட்டு மனை இல்லாத தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு அதிகபட்சம் ரூ.4,00,000 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், தனியார்பள்ளிகள் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி வழங்கவும், அரசு , அரசு உதவி பெறும் , மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை பயின்று அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள், நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.
எனவே, தனியார்பள்ளிகளில் 2023-24 கல்வியாண்டிற்கு பிப்ரவரி2023 மற்றும் மார்ச்-2023 ஆகிய மாதங்களில் சேர்க்கைகள் நடைபெறுவதால் அதற்குரிய நடவடிக்கைகள் ஏற்படுத்தும் பொருட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பெறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா தொழில் புரிவோர்களான தையல் கலைஞர்கள், சலவை, சிகை அலங்காரம், ஓவியர், பனைமரத்தொழிலாளர், பொற்கொல்லர் விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி, கைவினை தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டுப்பணியாளர்கள், காலணி தொழிலாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் போன்ற 17 வாரியங்களில் திருச்சிராப்பள்ளி தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.திட்டம்) அலுவலக இணையதளம் மூலம் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.