திருச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்

திருச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-22 10:13 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டி நடத்தப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் "கலை திருவிழா போட்டிகள்" 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10ஆம் வகுப்புக்கு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கு ஒரு பிரிவு என மொத்தம் மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.

மேலும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1. கவின்கலை-நுண்கலை, 2 இசை (வாய்ப்பாட்டு), 3 கருவி இசை 4. நடனம். 5. நாடகம், 6.மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1. கவின்கலை-நுண்கலை, 2 இசை (வாய்ப்பாட்டு), 3 கருவி இசை-தோற்கருவி 4.கருவி இசை துளைகாற்றுக் கருவிகள் 5.கருவி இசை தந்திக்கருவிகள், 6.இசை சங்கமம், 7.நடனம். 8. நாடகம், 9. மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது. அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2 இசை (வாய்ப்பாட்டு), 3 கருவி இசை 4.நடனம். 5.நாடகம், 6.மொழித்திறன் உள்ளிட்ட 9 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்குபெற முடியும்.

பள்ளி அளவில் நடைப்பெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வட்டார (முதலிடம்) அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட (முதலிடம் மற்றும் இரண்டாம் இடம்) அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைப்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

திருச்சி மாவட்டத்தில் கீழ்காணும் அட்டவணையின்படி கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022 க்குள்ளும், வட்டார அளவில் 29.11.2022 முதல் 05.12.2022 க்குள்ளும், மாவட்ட அளவில் 06.12.2022 முதல் 10.12.2022 க்குள்ளும், வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவர;களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து வகை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இக்கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க செய்ய பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News