திருச்சியில் நடந்த போலீஸ் விளையாட்டு போட்டியில் ஆயுதப்படை அணி சாம்பியன்
திருச்சியில் மாநில அளவில் நடந்த போலீஸ் விளையாட்டு போட்டியில் ஆயுதப்படை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.;
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் தமிழக காவல்துறையின் 7 மண்டலங்களுக்கு இடையேயான 61-வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது.
இதில் திருச்சி மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கமாண்டோ ஸ்போர்ட்ஸ், தமிழ்நாடு ஆயுதப்படை, சென்னை பெருநகர போலீஸ் அணி என 7 மண்டலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என கலந்து கொண்டு விளையாடினர். நேற்று காலை இறுதிப்போட்டியும், மாலையில் பரிசளிப்பும் நடந்தது.
இதில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற புள்ளிகள் அடிப்படையில் தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸ் அணி 33 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
அதாவது கபடி-1, கைப்பந்து-3, கூடைப்பந்து-5, கால்பந்து-3, கையுந்து பந்து-3, ஆக்கி-3, கோ, கோ-5, டேபிள் டென்னிஸ்-5, யோகா-5 என மொத்தம் 33 புள்ளிகளை தமிழ்நாடு ஆயுதப்படை அணி பெற்றது. சென்னை பெருநகர போலீஸ் அணி 23 புள்ளிகளை எடுத்து 2-ம் இடத்தை பெற்றது.
இதுபோல பெண்களுக்கான விளையாட்டில் திருச்சி மத்திய மண்டல பெண்கள் அணி 25 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அதாவது, கபடி-5, கைப்பந்து-1, கூடைப்பந்து-3, கையூந்து பந்து-3, கோகோ-3, டேபிள் டென்னிஸ்-5, யோகா-5 என 25 புள்ளிகளை மத்திய மண்டல பெண்கள் அணி பெற்றது. 21 புள்ளிகள் பெற்ற சென்னை பெருநகர போலீஸ் பெண்கள் அணி 2-வது இடத்தை பெற்றது.
இதுபோல தனிநபருக்கு வயது வாரியாக நடந்த ஆண்களுக்கான யோகா போட்டியில் தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸ் அணியை சேர்ந்த எஸ்.மாரீஸ்வரன் 4 தங்கம் வென்று ஒட்டு மொத்த சாம்பியன் ஆனார்.
இதுபோல பெண்களுக்கான தனிநபர் யோகா போட்டியில் திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த பி.பவித்ரா 2 தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.