திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பதவியேற்றார்
திருச்சி மாநகராட்சி மேயராக பதவியேற்ற அன்பழகன் மேயர் நாற்காலியில் அமைச்சர்கள் அமர வைத்தனர்
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 27-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.அன்பழகன், திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இன்று மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் முத்துவேல் - பரிபூரணதம்மாள் தம்பதிக்கு 1956-ம் ஆண்டில் மகனாக பிறந்தார். பி.யு.சி., எம்.ஏ. வரலாறு படித்துள்ளார். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு சரண்யா, ரக்ஷனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
அன்பழகன் 1983-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார்.1989-ம் ஆண்டு திருச்சி நகர இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1993-ம் ஆண்டு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு திருச்சி நகர தி.மு.க. செயலாளராகவும், பின்னர் திருச்சி மாநகராட்சியான பிறகு, திருச்சி மாநகர தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் முதன் முதலில் 1996-ம் ஆண்டு மாநகராட்சியில் முதலியார்சத்திரம் பகுதியில் அப்போதைய 26-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 4 முறை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2 முறை துணை மேயராக பதவி வகித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று காலை திருச்சி மாநகராட்சி மேயராக போட்டியிட்டார். அவருக்கு போட்டியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ, இனிக்கோ இருதயராஜ் ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது,
மேயர் பதவியை பொறுப்பாக கருதி செயல்படுவேன். திருச்சி மாநகராட்சியை குப்பையில்லா மாநகராட்சியாக மாற்றுவதே என் தலையாய கடமை. சென்னைக்கு நிகராக திருச்சியை தரம் உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார். அவரின் இந்த நோக்கத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார்.
திருச்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 27 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக திமுக மேயராக பொறுப்பேற்றார். அவரை அமைச்சர்கள் மேயர் நாற்காலியில் அமர வைத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதை ஏற்ற மேயர் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.