திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.வினர் மீது வழக்கு

திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அ.தி.மு.க.வினர் 900 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-12-19 08:18 GMT

மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்ததாத தி.மு.க.அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க.சார்பில் நேற்று முன்தினம் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 3 மாவட்ட செயலாளர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன் (மாநகர்), குமார் (புறநகர் தெற்கு), பரஞ்சோதி (புறநகர் வடக்கு) உள்பட 900 பேர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதே போல் தரமற்ற வீடுகளை கட்டி வழங்கியதை கண்டித்து திருச்சி மதுரை சாலையில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, பகுதி செயலாளர் ராமர் உள்பட 60 பேர் மீது காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News