திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் ஊர்வலம்
திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் வீர வணக்க நாள் ஊர்வலம் நடத்தப்பட்டது.
தமிழுக்காக நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிர் நீத்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினமாக தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகள் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சியில் இன்று அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் ஊர்வலம் திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர் .சிலை அருகில் இருந்து புறப்பட்டது.
இந்த ஊர்வலத்திற்கு அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர்கள் இப்ராகிம்ஷா (திருச்சி மாநகர்), அறிவழகன் (திருச்சி வடக்கு), அழகர் சாமி (திருச்சி தெற்கு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
அ.தி.மு.க .மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன் (மாநகர்), பரஞ்ஜோதி (வடக்கு), குமார் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் (முன்னாள் எம்பி), முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் சமாதிக்கு சென்றதும் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு கலைந்து சென்றனர்.