மின் கட்டண உயர்வு கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி மாநகர மாவட்ட அ.தி.மு.க.சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மின் கட்டண உயர்வை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட அவை தலைவர், மலைக்கோட்டை ஐயப்பன் தலைமையில், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி செயலாளர்,ஆவின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ரத்தினவேல் கலந்து கொண்டு பேசுகையில் அ.தி.மு.க. ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் அறிவித்து செயல்படுத்தியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா.மின்சாரம் என்றாலே தி.மு.க.விற்கும், அதற்கும் நெருங்கிய பந்தம் இருக்கிறது..எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு வந்து விடுகிறது.இந்த நிலைமைகள் எல்லாம் மாற வேண்டும் என்று சொன்னால் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பீடத்திற்கு வர வேண்டும்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால்தான், மக்கள் திட்டங்கள் செயல்படும். விடியா தி.மு.க. ஆட்சியில் ரூ. 250 முதல் ரூ. 750 வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த விடியா தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம் உயர்வு, மின் வெட்டு காரணமாக தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கும் விடியா தி.மு.க. அரசு கண்டித்தும், சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவு நீர் இணைப்புக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்ட வரி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.