திருச்சி அருகே நடந்த விபத்தில் கார் மோதி டிரைவர் பலி- நண்பர் படுகாயம்
திருச்சி அருகே நடந்த விபத்தில் கார் மோதி டிரைவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.;
திருவெறும்பூர் கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் மூவேந்தர் (வயது 24). இவர் கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பாலமுருகனை (23) தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு திருச்சிக்கு புறப்பட்டார்.
திருவளர்சோலை கல்லணை சாலையில் அவர்கள் வந்த போது, எதிரே திருச்சி உறையூர் ராமலிங்க நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 54) என்பவர் ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் மூவேந்தர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலமுருகன் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகவேல், சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள்ரெனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.