திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
பகுத்தறிவு பகலவன் என போற்றப்படும் தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17ம் தேதி தமிழக அரசு சார்பில் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதி தினத்தன்று அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொள்வது மரபாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமூக நீதி தினமான நாளை மீலாடி நபி விழா காரணமாக அரசு விடுமுறை என்பதால் இன்றே அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதியையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் அன்பழகன் சமூக நீதி நாள் உறுதிமொழியை படிக்க அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அதனை திரும்ப படித்து உறுதி எடுத்துக்கொண்டனர்.துணை ஆணையர் கே. பாலு , நகர் நல அலுவலர் மணிவண்ணன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ,பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.