திருச்சி அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
திருச்சி அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை அழைத்து வருவதற்காக, பள்ளியில் வேன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வேன் பழுதடைந்த காரணத்தால், இன்று பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக தனியார் வேன் ஒன்று வாடகைக்கு பேசப்பட்டு உள்ளது.
இந்த வேனை இனாம்புலியூரை சேர்ந்த டிரைவர் சங்கர்(வயது 21) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பள்ளக்காடு பகுதியில் உள்ள 30 பள்ளி மாணவ, மாணவிகளை வேனில் ஏற்றிக்கொண்டு அவர் பள்ளியை நோக்கி வேனை ஓட்டி சென்றுள்ளார். பள்ளக்காடு பகுதியை அடுத்து வேன் வந்து கொண்டிருந்தது. வயல்வெளி பகுதி என்பதால் சாலையின் இருபுறமும் சுமார் 3 அடி அளவிற்கு பள்ளம் இருந்துள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது வேன் மோதி உள்ளது. இதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த பள்ளி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு வந்து பள்ளி குழந்தைகளை மீட்டனர். லேசான காயம் அடைந்த குழந்தைகளை இருசக்கர வாகனங்கள் மூலம்அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இதில் 2 பள்ளி குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சோமரசம்பேட்டை தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். பள்ளி வேன் மோதியதில் காயடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்து குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.